உங்களை 'சின்னம்மா' என்று அழைக்க சங்கடமாக உள்ளது. ஏனெனில், ஊர்ப்பக்கம் அப்பாவின் இளையதாரத்தை தான் அப்படி அழைப்பார்கள். எனவே 'சின்னம்மா' என்று உங்களை அழைப்பவர்கள் தங்களின் அப்பாவையும் உங்களையும் ஒரு சேர அவமதிக்கிறார்கள்.
உங்களை 'சசிகலா நடராஜன்' என்றும் அழைக்கலாம் என்று பார்த்தால், நீங்களே அவர் பெயரை நீக்கி விட்டீர்கள். "Living Not Together" என்று வாழ்ந்து காட்டிய உங்களின் பெயர் பின்னால் 'நடராஜன்' என்ற பெயரை சேர்ப்பது சரியாக படவில்லை.
சரி, நீங்களே உங்களை அழைத்துக்கொள்வது போல் V K சசிகலா என்று அழைக்கலாம் என்று பார்த்தால், மற்றவர்கள் அதை வேலைக்காரி சசிகலா என்று புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் உங்களை வெறும் சசிகலா என்று அழைத்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
இன்றையதினம், அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும், பத்திரிக்கைகளும் சமூகதளங்களும் உங்களுக்கு எதிரே அணி திரண்டு நிற்கின்றனர். எதற்காக? நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்க கூடாது என்பதற்காக !
என்ன கொடுமை இது? அந்த அளவுக்கு கொடுங்கோலரா நீங்கள்? இல்லை கொள்ளை அடிப்பவரா?
'காலிகூலா' ரோமாபுரியையும், '14 ஆம் லூயி மன்னர்' பிரெஞ்சையும், 'ஹிட்லர்' ஜெர்மனையும், 'இடி அமீன்' உகாண்டாவையும், 'சதாம் ஹுசைன்' இராக்கையும் ஆண்டபோது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்களுக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா?
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏதோ தமிழ்நாட்டையே தனியாக பெயர்த்தெடுத்து போய்விடுவீர்கள் என்பது போல் வாய்க்கு வந்த படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அப்படி என்ன "பொன்விளையும்" பூமியா? அல்லது "நெல் விளையும்" நிலபுலன்களை கொண்டதா? இந்த 40 வருட திராவிட ஆட்சியில் "காவிரி, தென் பெண்ணை, பாலாறு" என காய்ந்து போன ஆறுகளை கண்டு ஓய்ந்து போன விவசாயிகளை கொண்ட நாடல்லவா இது? "பால்,தேன்" ஓடிய இடத்தில் "மீத்தேன்" ஓடும் சுடுகாடல்லவா நம் நாடு? இப்படிப்பட்ட நாட்டில் நீங்கள் கொள்ளை அடிக்க என்ன உள்ளது?
ஆற்று மணலையும், கிரானைட் மலைகளையும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது கொள்ளையடித்து இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரண்டி எடுத்த பின், என்ன மீதம் உள்ளது நீங்கள் கொள்ளையடிக்க? இதை அறியாத மூடர் கூட்டம் தான் நீங்கள் பதவி ஏற்கக்கூடாதென்று பதறுகிறது.
தமிழ்நாடு ஒரு பணக்கார நாடு என்றால் உலகமே சிரிக்கும். ஏனெனில் இது ஒரு ஏழை நாடு. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதற்காக மக்களை ஏழையாகவே வைத்திருந்த திராவிட நாடு. இப்பேற்பட்ட ஏழைகள் இருக்கும் நாட்டில் நீங்கள் என்ன கொள்ளை அடிக்கமுடியும்? எதற்காக மக்கள் எதிர்க்க வேண்டும்?
1991 - 1996 வரை நாம் ஆண்டபோது "அமிர்தாஞ்சனம்" மாளிகையை தவிர அனைத்து பெரிய பெரிய மாட மாளிகை கூட கோபுரங்களை வளைத்து போட்டாயிற்று. கொட நாடு முதல் கோடியக்கரை வரை இருக்கும் இடமெல்லாம் நம்முடையது தான். தி.நகர் "ஜுவல்லர்ஸில்" இருந்த தங்க நகைகளையும் சுருட்டியாகிவிட்டது. பின் 2006 - 2011 வரை நம் பங்காளிகள் ஆண்டபோது, ஊரில் இருந்த அத்தனை நிலங்களையும் அவர்கள் பறித்து கொண்டனர். சென்னையில் ஒரு "சேட்டு" கூட தன் இடத்தை பறி கொடுத்தார். இப்படி, யாரிடமும் கொள்ளையடிக்க நிலமோ நகையோ இல்லை. இப்பேற்பட்ட நிலையில் நாட்டில் நீங்கள் என்ன கொள்ளை அடிக்கமுடியும்? எதற்காக மக்கள் பயப்பட வேண்டும்?
அது மட்டுமா? 2011 - 2016 கால கட்டத்தில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அரசாங்கமே "டாஸ்மாக்" கை நடத்தி மக்களிடம் இருந்த பணத்தையும் அவர்களின் உடல் நலத்தையும் கொள்ளை அடித்து விட்டோம். இனி கொள்ளை அடிக்க எதுவும் இல்லாத நாட்டில் நீங்கள் என்ன கொள்ளை அடிக்கமுடியும்? மக்கள் யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.
மக்கள் கேட்கிறார்கள் "நான் போட்ட ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்களா?" என்று. அதையே நாம் திருப்பிக்கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தால், 'என்ன, ஓட்டுக்கு 1000 ரூபாய் தானா? ஆட்சியில் இல்லாத அவர்களே 2000 தருகிறார்கள், நீங்கள் 3000 கொடுங்கள் என்று நம்மிடம் கறாராக கறந்தார்களே அந்த மக்கள். அப்போது அவர்கள் சிந்தித்தார்களா, காசு வாங்கி ஒட்டு போட்டால் இந்த கருமத்தை எல்லாம் சகித்துக்கொள்ளவேண்டி வரும் என்று? எனவே, சசிகலா அவர்களே, இப்படி பட்ட மக்களை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.
ஒரு பத்திரிக்கை எழுதுகிறது "OPS" அவர்கள் கட்டாயத்தின் பெயரில் தான் பதவி விலகினார் என்று அவர்கள் தான் முதலில் செய்தி போட்டார்களாம். என்னே ஒரு கண்டுபிடிப்பு !!. ஊர் உலகத்துக்கே தெரிந்த ஒரு விஷயத்தை இவர்கள் என்னோவோ துப்பறிந்து போட்டது போல் எழுதுகிறார்கள். இவர்களின் பத்திரிகை தரம் அவ்வளவு தான். எனவே, சசிகலா அவர்களே இது போன்ற பத்திரிக்கைகளை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.
தன் வீட்டு பெண்கள் கருவுற்றால் கூட அதற்கும் 'மோடி' தான் காரணம் என்றும், 'மோடியின்' பினாமி "ரிலையன்ஸ்" என்று திட்டிக்கொண்டே 'ஜியோ' சிம் கார்டை ஓசியில் வாங்க வரிசையில் நிற்கும் கூட்டமும் தான் வலைத்தளங்களில் உங்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறது. இப்படிப்பட்டவர்களின் கருத்துக்களை எல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று காந்தி சொன்னார். அவருக்கு தெரியும் இல்லையெனில் வருவோர் போவோர் எல்லாம் தன் பெயரையும் கட்சியின் பெயரையும் போட்டுக்கொண்டு நாட்டை சீரழிப்பார்கள் என்று.
அதே போல், ஜெயலலிதா அவர்கள் இறக்கும் தருவாயில் உங்களிடம் "சசி, எனக்கு பின்னால் இந்த ஆட்சியையும், கட்சியையும் கலைத்துவிடு. இல்லையெனில் "அம்மா" என்ற பெயரையும் கட்சியின் பெயரையும் ஆளாளுக்கு தங்களுக்கு முன்னால் / பின்னால் போட்டுக்கொண்டு நாசம் பண்ணிவிடுவார்கள்" என்று.
நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். கட்சியையும் ஆட்சியையும் கலைத்துவிட அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இது புரியாமல், நயா பைசா உபயோகமில்லாத இந்த நாட்டை நீங்கள் கொள்ளை அடித்துவிடுவீர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே உங்களுக்கு எதிராக கிளம்பியுள்ளது.
சசிகலா அவர்களே, ஊர் உலகமே உங்களை பார்த்து "காறித்துப்பினாலும்", நீங்கள் உங்கள் உடன் பிறவா சகோதரிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக இவ்வளவு அவமானப்படுவதை பார்க்கும் போது என் மனம் வேதனைப்படுகிறது.
இருந்தும், உங்களின் இடை விடா முயற்சியாலும், ஜெயலலிதா அவர்களின் ஆத்ம பலத்தாலும் இன்ன பிற சக்திகளாலும் "இந்த ஆட்சியையும், கட்சியும்" சீக்கிரமே கலைந்து விடும்.
உங்கள் முயற்சி கூடிய விரைவில் வெற்றி பெற தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
நன்றி Raveendran P by what's up more